search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் விழா"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலக காலனியில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கார்த்திக்.

    கடந்த 17-ந்தேதி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் பிரவீண் ஆகியோர் தலைமை செயலக காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்த போது திரு.வி.க.நகர் தொகுதி தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் சாமிக் கண்ணு வீட்டு முன்பு இருந்த இரும்பு தடுப்பு வேலியை நகர்த்தி வாகனத்தில் செல்ல முயன்றனர். அப்போது கார்த்திக்கை, சாமிக்கண்ணு மற்றும் அவரது மகன்கள் மைனர் பாபு தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சாமிக்கண்ணு, அவரது மகன்கள் மைனர் பாபு (38), ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.
    • நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிபட்டியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு பங்கேற்ற வினோத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

    இந்த கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது.ஆனால் பெரிய அளவில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களின் இடையில் அரிவாள் மற்றும் வேல் கம்புகள் உள்ளது.இதையே தெய்வமாக நினைத்து இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள். இந்தப் பாரம்பரிய திருவிழாவை ஒட்டி தலையாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இங்கு குவிந்தனர்.அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் முன்பு ஆடுகள் பலியிடப்பட்டன.தொடர்ந்து பெரிய அண்டாக்களில் சாப்பாடு கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் ஆண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தனர்.பின்னர் அவர்களுக்கு வாழை இலையில் சாப்பாடு, கறி குழம்பு பரிமாறப்பட்டது.விடிய விடிய இந்த கறி விருந்து நடைபெற்றது.இதில் தலையாரிபட்டி,ராமராஜபுரம்,பாறைப்பட்டி, ஜோத்தாம்பட்டி,வடுகபட்டி, பூவகிழவன்பட்டி, மணியக்காரன்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, ஏழு கொட்டம், 4 கொட்டம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் பெரியோர்கள் என ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு கமகம கறி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, எங்கள் முன்னோர்கள் கிராமங்களில் நல்ல மழை பெய்திடவும்,நோய் நொடி இல்லாமல் கிராம மக்கள் நிம்மதியாக வாழவும், இந்த வழிபாட்டை நடத்தி வந்தனர். இந்த விழாவை நாங்களும் ஒன்று சேர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்துகிறோம். இந்த கறி விருந்து வெளியில் பெண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அருகிலேயே ஒரு பெரிய குழி தோண்டி மீதம் இருக்கக்கூடிய சாப்பாடு மற்றும் இலைகளை குழியில் புதைத்து விடுவோம் என்றனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் மலை மருந்தீஸ்வரர்-முனிநாத சுவாமி கோவில்உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடை பெற்றது.

    ஏரியூர் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்கள் ஏரி கண்மாயில் மீன்பிடி திருவிழாவும், அதனை தொடர்ந்து பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நேற்று மாலை நடந்தது.

    முன்னதாக ஏரியூர், மயில்ராயன் கோட்டை, வலையபட்டி, கலிங்கப்பட்டி போன்ற 10-க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஓடிய காளைகளை வீரத் தோடு திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • யானை மிரண்டு ஓடியதை கண்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
    • கோவில் விழாவில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கல்லேலக்காட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சாமி ஊர்வலமும் நடந்தது. இதில் சாமி சிலையை சுமந்து செல்ல புத்தூர் கணேசன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையை பாகன் கோவில் வளாகத்தில் நிறுத்தி இருந்தார்.

    நேற்று இரவு சாமி ஊர்வலம் முடிந்து யானை ஓய்வெடுத்து கொண்டிருந்தது.

    அப்போது கோவிலில் இரவு 10 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனை காண கோவில் வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும் அதன் சத்தத்தை கேட்ட யானைக்கு மதம் பிடித்தது. உடனே யானை கோவில் வளாகத்தில் இருந்து மிரண்டு ஓடியது.

    யானை மிரண்டு ஓடியதை கண்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். அவர்களை யானை தூக்கி வீசியது. இதில் பாலக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 63) என்ற பக்தர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபோல 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் யானை மிரண்டு ஓடிய போது சாலையில் நின்ற வாகனங்களையும் தும்பிக்கையால் தூக்கி வீசி துவம்சம் செய்தது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.

    இதற்கிடையே தகவல் அறிந்து கால்நடை துறை டாக்டர்களும், வனத்துறையினரும் அங்கு வந்தனர். இதுபோல யானையின் பாகனும் அதனை அடக்க முயன்றார். அனைவரும் சேர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் விழாவில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வார ஞாயிறு அன்று, முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    போதமலை அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. மலைவாழ் மக்கள் இக்கோவில் உள்ள கள்ளவழி கருப்பனாரை வழிபட்டு வருகின்றனர். இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். மலைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.

    விழாவையொட்டி, நேற்று இரவு கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார். அதன்பிறகு கோவில் முன்பு ஆடுகளை வெட்டி பலியிட்டனர். அடுத்து, ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் 46-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

    பலியிட்ட ஆடுகளை அதிகாலை வரை சமைத்து ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. சுமார் 2500 கிலோ இறைச்சி சமைத்து, பச்சரிசி பொங்கலுடன் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள், நீண்ட வரிசையில் நின்று அசைவ சமபந்தி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து விழாக்குழுவினர் மக்கள் நோய்நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கவும். குடும்ப பிரச்னைகள் தீரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பரம்பரை பரம்பரையாக இந்தவிழாவை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றனர். 

    • புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி நடந்தது. நடு மாட்டு வண்டி போட்டியை ஊர் தலைவர்கள் சுப்பிரமணியன், ஆண்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் வேலங்குளம் கண்ணன் வண்டி முதலாவதாகவும், கடம்பூர் கருணாகர ராஜா வண்டி 2-வதாகவும், முத்தையாபுரம் ஓம் முருகா வண்டி 3-வதாகவும் வந்தது. அடுத்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி ரேஸ் போட்டியில் 49 வண்டிகள் கலந்து கொண்டதால் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரேஸ் நடத்தப்பட்டது. புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முதல் பிரிவு போட்டியில் கம்பம் குரு தர்ஷன் சிந்தலக்கட்டை பொன்னம்மாள், அரசடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன. 2-வது பிரிவில் தேனி மாவட்ட வண்டி சந்தா ஓடை, செக் காரகுடி வண்டிகள் முதல் மூன்று பரிசுகளை வென்றன. 15 குதிரை வண்டிகளுடன் நடந்த குதிரை வண்டி ரேஸில் நெல்லை போஸ் பாண்டியன் வண்டி முதலாவதாகவும், அருப்புக்கோட்டை ராமலிங்கம் 2-வதாகவும், கோவில்பட்டி மணிகண்டன் வண்டி 3-வதாக வந்தது. பின்பு நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர். மாட்டு வண்டி ரேசை காண சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கோவிலில் கடந்த 30-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகேயுள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 30-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க நல்லூர் பகுதி முளங்குழி என்ற இடத்தை சேர்ந்த பொன்னுப்பிள்ளை மனைவி ஞானம்மாள் (வயது 72) சென்றிருந்தார்.

    அப்போது கூட்டத்தில் யாரோ மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இது தொடர்பாக ஞானம்மாள் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதே கோவிலில் நகை திருட்டு போனதாக ஏற்கனவே திரசம்மாள் என்ற பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதே நாளில் கோவில் கூட்டத்தில் தங்க நகைகள் பறித்ததாக சென்னையை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பொதுமக்களால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதும் குறிப்பிட தகுந்ததாகும்.

    ×